Show all

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா! நாளை தெரியும்; திமுக, அதிமுக இருவருக்குமே இந்தத் தேர்தலில் ஆர்வம் இல்லையாம்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. 

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு பதிகை தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து கருத்துப் பரப்புதலைத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கையைப் பதிகை செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தின. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் கூறின. சில கட்சிகள் தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்தின.

அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதா? தள்ளிவைப்பதா? என்பதை அறிவிப்பார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.