Show all

சென்னை மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் தாமதமோ தாமதம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தாமதமடைந்து கொண்டே செல்வதற்கு, நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மை ஆகியவையே காரணங்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நடுவண் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மார்ச் 2015-ம் நாளன்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மை, இதனால் மறு ஒப்பந்தங்கள் என்று தாமதத்துக்குக் காரணங்களை வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் வெங்கய்ய நாயுடுவின் பதிலிலேயே மெட்ரோ ரயில் வேலைகள் நிறைவடைய வேண்டிய நாள் பற்றிய குழப்பம் தெரிந்தது. எதிர்பார்த்த அளவில் டிசம்பர் 2016-ல் முடியவேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட பணி நிறைவு நாள் டிசம்பர் 2017 என்று இருவேறு காலக்கெடுவை அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய நிறுவனம் மாஸ்மிட்ரோஸ்ட்ராய் திட்டத்தை கைவிட்டதையடுத்து அதன் கூட்டாளி நிறுவனமான கேமன் இந்தியா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு மறு ஒப்பந்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பணிகள் மிகவும் மந்த நிலையில் நடந்ததால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. அதன் பிறகு புதிதாக ஒப்பந்தங்கள்; விடப்பட்டன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் உத்தேச செலவு ரூ.14,600 கோடியாகும். நகரத்தின் 45 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வருகிறது. இதில் 24 கிமீ ரயில் பாதை பூமிக்கு அடியில் அமைக்கப்படுகிறது.

இதுவரை இத்திட்டத்துக்காக ரூ.6,597 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான விரிவாக்க மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சமீபத்தில்தான் ஒப்புதல் கிடைத்தது. 9 கிமீ தொலைவு கொண்ட இதற்கு ரூ.3,700 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆலோசகர்களை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் இருந்து வருகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.