Show all

சல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மாநிலங்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பி பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா,

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாதது தமிழக மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். நடுவண் அரசு உடனடியாக கவனம் செலுத்தி போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக இந்தப் பிரச்சனையை அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் எழுப்பினார். தை மாதத்தில் பொங்கல் விழாவின் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்ததை சுட்டிக்காட்டிய அவர் தற்போது அவற்றை நடத்த முடியாத நிலை நிலவுவதாக கூறினார். காட்சி படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்துள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. என்று அவர் வலியுறுத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.