Show all

நடுவண் அரசின் கொள்கை மக்களின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளதாகக்குற்றச்சாட்டு.

வாட்ஸ் அப்,

கூகுள் ஹேங் அவுட்ஸ்,

ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை

90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை நடுவண் அரசு வாபஸ் பெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் புதிய வரைவு கொள்கையை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவலை டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த நடுவண் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,

தகவல் பரிமாற்றங்களை 90 நாட்கள் அழிக்கக்கூடாது என்று வெளியிடப்பட்ட குறியீட்டுக் கொள்கை வெறும் மாதிரி அறிக்கை மட்டுமே. இது அரசின் கருத்து அல்ல.

வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொதுமக்களை கட்டுப்படுத்துவது குறியீட்டுக் கொள்கையின் நோக்கம் அல்ல. சில விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. எனவே வரைவு கொள்கை வாபஸ் பெறப்படுகிறது.

நடுவண் அரசை பொறுத்தவரை சுதந்திரமான சமூக இணையதள வசதியை ஆதரிக்கிறோம். எனினும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்த குறியீட்டுக் கொள்கை வரையறுக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டு மக்களின் கருத்துகள் கோரப்படும் என்றார் அவர்.

முன்னதாக, கடந்த 1995-ல் இந்தியாவில் முதல்முறையாக செல்போன் தொலைத்தொடர்பு சேவை அறிமுகமானது. அதன்பின்னர் கடிதம், வாழ்த்து அட்டைகள் மங்கி மறைந்து எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். ஆகியவை கோலோச்சின. இப்போது எஸ்.எம்.எஸும் எம்.எம்.எஸும்கூட அருகி வருகின்றன.

ஸ்மார்ட்போன்களின் வரவால் வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவை தகவல் பரிமாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய வரைவு கொள்கை ஒன்றை மத்திய அரசு வரையறுத்தது.

மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் வல்லுநர் குழு உருவாக்கிய இந்த வரைவு கொள்கை நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டன.

அந்த வரைவு கொள்கையில், வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் ஆகியவற்றில் பரிமாறப்படும் தகவல்களை 90 நாட்களுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும், அவற்றை அழித்தால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் மட்டுமன்றி வணிக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள நிறுவனங்களும் இந்தக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வரைவு கொள்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. நடுவண் அரசின் கொள்கை மக்களின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளது என்று பெரும்பாலானோர் குற்றம்சாட்டினர்.

இதன் தொடர்ச்சியாகவே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் புதிய வரைவு கொள்கையை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.;


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.