Show all

எல்லா ஊழலையும் செய்த திமுக காங்கிரசு மறுபடியும் ஏன் கூட்டணி சேர்ந்தன: பிரேமலதா

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட்டது தேமுதிக-வை தன் பக்கம் இழுக்கத்தான். ஆனால் இந்தக் கட்சி யாருக்கும் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.

 

திமுக, தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை ரொம்ப நாளாகவே நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, திமுக, தேமுதிக, பாஜக என்ற யாரும் எதிர்பார்க்காத கூட்டணி அமைய விருப்பப்பட்டு சுட்டுரையில் கருத்து கூறினார்.

 

இதனையடுத்து, இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என வியூகங்கள் வந்தன. ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படாமல் இந்த கூட்டணி கனவு காற்றிலே கரைந்து போனது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த சனிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.

 

இந்தச் சந்திப்பிற்கு பின் திமுக, காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் திமுக பொருளாளர் ஸ்டாலின் தேமுதிக, திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்நிலையில் திமுகவின் இந்த அழைப்புக்கு பதில் சொல்லும் விதமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, திமுக, காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்து கூட்டணிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

 

கடந்த ஆண்டுகளில் நடந்த பல பிரச்சனைகளுக்கும், ஊழல்களுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என போட்டுத்தாக்கினார். எல்லா ஊழலையும் செய்த இந்த இரு கட்சிகள் மறுபடியும் ஏன் கூட்டணி சேர்ந்தன என அவர் கேள்வி எழுப்பினார்.

 

திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து, பின்னர் தேமுதிக-வுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரேமலதாவின் இந்தக் கருத்து, திமுக கூட்டணியில் தேமுதிக வராது என்பதையே உணர்த்துகிறது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.