Show all

இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று சந்தை நிபுணர்கள்

பங்குச் சந்தை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்க மத்திய வங்கி பத்தாண்டுகளில் முதன்முறையாக சென்ற டிசம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக, அந்த வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது.

 இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகள் மட்டுமின்றி சர்வதேச பங்குச் சந்தைகளிலும் அவ்வப்போது எதிரொலித்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள், நடப்பு ஆண்டில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவையை அதிகரிப்பதில் முக்கிய காரணியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுகுறித்து உலக தங்க கவுன்சில் கூறும்போது:

 கடந்த 2015-ஆம் ஆண்டில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருந்தது. அந்த ஆண்டில் சீனாவில் தங்கம் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து, 984.5 டன்னாக இருந்தது. அதேசமயம், இந்தியாவில் அதற்கான தேவை 2 சதவீதம் உயர்ந்து 848.9 டன்னாக இருந்தது. மோசமான வானிலை மற்றும் கிராமப்புறங்களில் வருவாய் குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, தற்போதைய பங்குச் சந்தை நிலவரங்கள் முக்கிய காரணம்.

 முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதை அடுத்து, நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கத்தின் விலை 15 சதவீதம் அதிகரித்தது.

 சீனப் பொருளாதார நிலவரம் நன்கு இல்லாததையடுத்து, அங்கு ஆபரண தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது. அதேசமயம், டாலருக்கு எதிரான கரன்ஸி மதிப்பு சரிவு அங்கு முதலீட்டு தங்கத்திற்கான தேவையை அதிகரித்துள்ளது.

 இந்தியாவை பொருத்தவரையில், ஆபரணங்கள் மற்றும் முதலீடு ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கத்திற்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நடப்பு ஆண்டில் தங்கத்திற்கான தேவை கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.