Show all

உச்சநீதிமன்றமே தற்போது காவிரி பிரச்சனையை விசாரிப்பதில் காலதாமதத்தை அனுமதிக்கிறது.

அனைத்து கட்சிகள் ஆதரவுடன்,

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரி சென்னையில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், கர்நாடகா 45 டிஎம்சி தண்ணீரை உடனே தர உத்தரவிட வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நாளை சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு 192 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். இதில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி வரை தர வேண்டிய தண்ணீரில் 45 டிஎம்சியை கர்நாடகா வழங்க வேண்டி உள்ளது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சரியான மழையும் இல்லை. டெல்டாவில் தண்ணீரின்றி வாடும் சம்பா பயிரைக் காப்பாற்ற, கர்நாடகா பாக்கி வைத்துள்ள 45 டிஎம்சி தண்ணீரை உடனே தர உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், தலைமை நீதிபதி தத்து, நீதிபதி அமிதவராய் ஆகியோரது அமர்வு முன் ஆஜராகி தமிழக அரசின் வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பாலி நாரிமன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு தீபாவளிக்குப் பின்னர் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக விவசாயிகள் நடுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக அரசு தர வேண்டிய 45 டிஎம்சி தண்ணீரை உடனே தர நடுவண் அரசு உத்தரவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம்,

காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகிய அமைப்புகளை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அடுத்த கட்ட போராட்டமாக நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி, அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன், உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு உள்ளார். அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இந்த நிலையில் நாளை சென்னையில் உண்ணாவிரதம் நடக்கிறது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறியதாவது,

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம்,

நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவை நடுவண் அரசு அமைக்க வேண்டும்.

தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று உடனடியாக இருஅமைப்புகளையும் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில்

தமிழக அரசின் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்கமுடியாது என்றும் தீபாவளிக்கு பிறகு மனுவை விசாரிக்கலாம் என்றும் தமிழக அரசு கர்நாடகாவுடன் ஒத்துபோக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் பெரும்அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில்தான் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னையில் நாளை(4ம் தேதி)அதிமுக, திமுக, தேமுதிக, உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்கின்ற வகையில் உண்ணாவிரதப்போராட்டத்தை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பாண்டியன் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சட்டமன்றஉறுப்பினர் கூறியதாவது,

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். உச்சநீதிமன்றமே தற்போது காவிரி பிரச்சனையை விசாரிப்பதில் காலதாமதத்தை அனுமதிக்கிறது. பல வழக்குகள் இரவோடு இரவாக விசாரித்து தீர்ப்பு கூறிய முன் உதாரணம் உண்டு.

ஆனால் தற்போது தமிழக விவசாயிகள் சம்பாவை காப்பாற்ற தண்ணீர் இல்லை என்று கேட்டு காய்ந்த பயிரைக் காப்பாற்ற தண்ணீர் கேட்கும் வழக்கை தீபாவளிக்கு பின்னர் விசாரிக்கலாம் என காலதாமதப்படுத்துவது முறையாக நடந்து கொண்டதாக தெரியவில்லை.

தீபாவளிக்கும் உச்சநீதிமன்ற பணிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதே தெரியவில்லை. எனவே உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சனையை விரைவாக தீர்வுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.