Show all

லாலு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்துக்களும் மாட்டிறைச்சி உண்பதாக பேசிய லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது கடுமையான விமர்சனங்களுக்கும், போராட்டங்களுக்கும்  ஆதாரமாக மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த  விவகாரத்தில் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களில் அரசு மற்றும் நீதிமன்றம் தலையிடுவதா என போராட்டம் வலுத்து வருகிறது. ஏற்கனவே பண்டிகை காலத்தை காரணம் காட்டி மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் டெல்லி அருகே தாத்ரியில் முகமது அக்லாக் என்ற முதியவர் மாட்டிறைச்சி வதந்தி காரணமாக  படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது.

இருந்த போதிலும் இதில் பிரதமர் மோடி வாயை திறக்கவில்லை என குற்றம் சாட்டி பல்வேறு அமைப்பினரும் டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தற்போது பீகாரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்திலும் அனலை கிளப்பியுள்ளது. இதையொட்டி பிரசாரத்தில் பேசிய ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் கூறுகையில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், இந்துக்களும் மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர் என்று சாடினார். தற்போது இதுதான் அவர் மீது வழக்குகள் பாய்வதற்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த விவகாரத்தில் பிந்து குமார் என்பவர் நர்பத் கஞ்ச் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அசோக் குமார் சுக்லா முன்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினரின் உணர்வுகளை புண்படும் வகையில் லாலு பேசிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து லாலு மீது மத உணர்வுகள் புண்படும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசியது, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக முசாபர்பூர், பாட்னா மாவட்டங்களில் நீதிமன்றத்தில் லாலு மீது வழக்குகள் பாய்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.