Show all

பல்லாயிரவர் கொல்லப்பட்ட குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு! திங்கட் கிழமை விசாரணை

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக முழுவதும் செய்தி பரவி, ஒட்டு மொத்த உலகையே பீதிக்குள்ளாக்கியது, ஏராளமானோர் கொல்லப்பட்ட குஜராத் கலவரம். 

குஜராத் மாநில மதக்கலவரத்தில் 1000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக அப்போது முதல்வராக இருந்த நரேந்திரமோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நரேந்திர மோடிக்கு தடை விதித்தன. 

இந்த நாடுகளுக்கு செல்ல அவருக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது. இந்நிலையில்; குஜராத் மாநில முதல்வராக 4 வது முறையாக நரேந்திரமோடி பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இதை தொடர்ந்து நரேந்திரமோடிக்கு விதிக்கப்பட்ட தடையை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விலக்கிக் கொண்டன. 
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செல்ல சுற்றுலா நுழைவிசைவு கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி மோடிக்கு நுழைவிசைவு தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது. 

மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார் மோடி. நியூஜெர்சியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள குஜராத் கலாச்சார மாநாட்டில் கலந்து கொள்ள சுற்றுலா நுழைவிசைவு கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று முன்பு எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் மோடிக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி பெலிஸ் கெயர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா நுழைவிசைவில் அமெரிக்க வர தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அவர் நிரூபிக்க வேண்டும் என்றார் கெயர். 

பாஜகவின் தலைமைஅமைச்சர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அரசு, மூன்று முறை நுழைவிசைவு வழங்க மறுத்துள்ள நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் நரேந்திர மோடி விடுவிக்கப்படாதவரை அவருக்கு நுழைவிசைவு தருவதில்லை என்ற கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க வெளியுறவு இணை மந்திரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார். 

குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி கலவர வழக்கில் இருந்து விடுவித்தது.

இந்த கலவரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி ஜாகியா ஜாப்ரி, நரேந்திர மோடியை கலவர வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய மனுவை குஜராத் உயர்அறங்கூற்று மன்றம் கடந்த ஆண்டு நிராகரித்தது.

இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு மனு பதிகை செய்தார். இந்த வழக்கு வரும் திங்கட் கிழமை விசாரணைக்கு வருகிறது. இதனை அறங்கூற்றுவர்கள் ஏ.எம்.கன்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் விசாரிக்க உள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.