Show all

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானம் விபத்துக்குள்ளானது 10பேர் பலி

தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த 10 வீரர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சப்தார்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ராஞ்சியில் உள்ள முகாமில் இருக்கும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்ய பிஎஸ்எப் வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு இந்தச் சிறிய ரக விமானத்தில் சென்றுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ரயில்வே தண்டவாளப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேப்டன் பக்வதி பிரசாத், துணைக் கமாண்டன் டி. குமார், விமானி ராஜேஷ் ஷிவ்ரெய்ன், ரவீந்திர குமார், எஸ்.என். ஷர்மா, சுரேந்தர் சிங், சிஎல் ஷர்மா, டி.பி. சௌஹான், கே.ஆர். ராவத், ஆர்.பி. யாதவ் ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக ஊடகங்களுக்கு தெரிவிப்போம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.