Show all

பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புதுப் புரளி.

உத்திர பிரதேசத்தில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புரளி பரவியதை அடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வாகனங்கள் அங்கு எரிக்கப்பட்டன.

உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விவகாரம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மேலும், உபியின் நொய்டாவிலும், தாத்ரி கிராமத்திலும் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆக்ரா அருகில் உள்ள மைன்புரி மாவட்டம் நகாரியா கிராமம் அருகே வயல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த பசு மாட்டை 4 பேர் பிடித்துச் சென்று அருகில் உள்ள வீட்டில் வைத்து வதை செய்து கொன்றதாக தகவல் பரவியது.

உடனே கிராம மக்கள் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசுவின் உடல் கிடந்தது. பொதுமக்களைப் பார்த்ததும் 4 பேரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 2 பேரை மக்கள் விரட்டிப் பிடித்தனர். 2 பேர் தப்பி விட்டனர்.

இந்த தகவலால் நகாரியா மற்றும் மைன்புரியில் கலவரம் ஏற்பட்டது. சிலர் கும்பலாக சென்று கடைகளுக்கு தீவைத்தனர். இதில் 12க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கலவரக்காரர்கள் போலீசார் மீதும் கல்வீசி தாக்கினார்கள். போலீஸ் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. கல்வீச்சில் 7 போலீசார் காயம் அடைந்தனர். நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

பசு கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பசுவின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே 4 பேரும் பசுவை கொன்று தோலை உரித்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. கல்வீச்சு மற்றும் தீ வைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் பலர் கைது செய்யப்படுவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்தக் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மைன்புரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.