Show all

மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்த ரூ.99க்கு சீர்மிகுசெல்பேசி

நமோடெல் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி ரூ.99 விலையிலான சீர்மிகுசெல்பேசி இன்று அறிமுகப்படுத்தினார். நமோடெல் அச்சே தின் என்ற இந்த சீர்மிகுசெல்பேசி 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம், மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2,999 ரூபாய் அடக்க விலை கொண்ட இந்தப் பேசி மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாதவ ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

பணம் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் வகையில்  இந்தச் சீர்மிகுசெல்பேசிக்கு முன்பதிவு செய்யலாம். பேசி டெலிவரி செய்வதற்கான கட்டணம் இதில் அடங்காது. வழக்கமான டெலிவரி தொகையை செலுத்த வேண்டும்.

 

இந்திய குடி மக்களுக்கும், ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என ரெட்டி தெரிவித்துள்ளார். இம்மாதம் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை முன்பதிவு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

namotel.com இணையதளத்தில் சீர்மிகுசெல்பேசி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது சீர்மிகுசெல்பேசியைப் பற்றி விளக்குவதற்காக மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சில மாதங்களுக்கு முன் ப்ரீடம் 251 என்ற சீர்மிகுசெல்பேசி 251 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்தார்கள். ஆனால் இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்கு பேசி வழங்கப்படவில்லை. மேலும் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.