Show all

காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆரூண் மீது மர்மநபர்கள் திராவகம் வீச்சு

அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆரூண் மீது மர்மநபர்கள் திராவகம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசன் ஆரூண் போட்டியிடுகிறார். இவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஆரூணின் மகன் ஆவார்.

 

இவர் தனது தந்தை மற்றும் உறவினர்கள் சிலருடன் தேர்தலுக்காக முகப்பேர் பகுதியில் உள்ள ஒலிம்பிக் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். தினமும் காலை, மாலை கருத்துப்பரப்புதலுக்காக அசன் ஆரூண் இங்கிருந்துதான் செல்வார். இரவில் அங்கேயே தங்குவார்.

 

இந்த நிலையில் நேற்று மாலை கருத்துப்பரப்புதலுக்காக அசன் ஆரூண், வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அவருக்கு பின்னால் அவரது ஆதரவாளர்கள் 2 கார்களில் சென்றனர். மாலை 4 மணி அளவில் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை 3-வது முதன்மைச்சாலை அத்திப்பட்டு சந்திப்பு அருகில், சிக்னலுக்காக அவர் சென்ற கார் நின்று கொண்டிருந்தது.

 

அந்த நேரத்தில் தாம்பரம்-மாதவரம் சாலை மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் திராவகம் நிரப்பிய முட்டை, கண்ணாடி பாட்டில்களை வேட்பாளர் அசன் ஆரூண் மீது வீசினர்.

 

அவை, அவர் அமர்ந்து இருந்த கார் கதவில் பட்டு தெறித்தது. அப்போது ‘குபீர்’ என புகை எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

 

அசன் ஆரூண் மீது வீசப்பட்ட பாட்டில் உடைந்த சத்தம் கேட்டு அவருக்கு பின்னால் வந்த அவரது அதரவாளர்கள் காரை விட்டு இறங்கி ஓடிச்சென்று அசன் ஆரூணை பாதுகாப்பாக காரை விட்டு அழைத்துச் சென்றனர். காரின் இடது பக்க கதவு கண்ணாடி மூடப்பட்டு இருந்ததால் திராவகம் அசன் அரூண் முகத்தில் படவில்லை.

 

கதவு கண்ணாடியைத் திறந்து வைத்து இருந்தால் அவரின் உடல் முழுவதும் திராவகம் பட்டு விபரீதம் ஏற்பட்டு இருக்கும். ஆனாலும் வீசப்பட்ட வேகத்தில் சிறிதளவு திராவகம் காருக்குள் கசிந்து அசன் ஆரூண் மீது பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன அவர் அதிர்ச்சியில் அலறினார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் கூறினர்.

 

சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அசன் ஆரூணை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

 

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க.வுக்கும், காவல்துறைக்கும் எதிராக முழக்கமிட்டனர். அசன் ஆரூண் மீது திராவகம் வீசியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் துணை காவல்ஆணையர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடமும், அசன் ஆரூணின் தந்தை ஆரூணிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று 5.30 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.