Show all

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நிறுவப்பட்டுள்ள ஆணையத்துக்கு தேவை அதிக நிதி.;

நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுரித்தியுள்ளார்.

அகில இந்திய மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட தொழிலாளர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு கவனத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் ஆளும் எந்த ஒரு அரசும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கோட்பாட்டை சட்டரீதியாக ஏற்றுக்கொண்டு ஆட்சி புரிந்தால் தான் நாட்டு மக்கள் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெறும். எனவே அதற்கு தகுந்தார்போல் ஆட்சியாளர்கள் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி புரிய வேண்டும்.

அதாவது நாட்டின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடை செய்ய வேண்டும். பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நிறுவப்பட்டுள்ள சமூக பாதுகாப்பான

ஆணையத்துக்கு அதிக நிதி ஒதுக்கி தொழிலாளர் நல உதவிகள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் இதர அனைத்து சலுகைகளும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழி வகைச்செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் மற்றும் பிற சலுகைகளையும் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சட்டப்பாதுகாப்பு வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் செப்டம்பர் 2 ம் தேதி புதன்கிழமை

தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில், அனைத்து பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர்களும் கலந்து கொள்கிறார்கள். இப்போராட்டம் நடைபெற்றால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்; பொருளாதார பரிவர்த்தனைகள் தடைபடும்; நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும்.

எனவே மத்திய பா.ஜ.க அரசு நம் நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். மேலும்   நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக அவசியம் என்பதை உணர்ந்தும், பொது மக்கள் நலன் கருதியும் அரசு சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்தி தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.