Show all

72அகவை ராபின்மெயினுக்கு 7 ஆண்டு சிறை 1 கோடியே 80 ஆயிரம் ரூபாய் அபராதம்

வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக 1987ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், ஐந்து பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது.

 

 

 

1983-85 காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, ராபின் மொயின் உள்ளிட்ட பலர் 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் போலியான வாகன சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 56 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

 

எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த கா. காளிமுத்து இந்தக் கடன்களுக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டது.

 

இது தொடர்பாக 1987ஆம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராபின்மெயின், சூரியகுமார், சாகுல்அமீது, சோமசுந்தரம், பெசில்சாம், சுப்பிரமணியன், நடராஜன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

 

வழக்கு நிலுவையில் இருக்கும்போது, முன்னாள் அமைச்சர் காளிமுத்து உள்ளிட்ட 16 பேர் இறந்துபோயினர்.

 

முக்கியக் குற்றவாளியான ராபின் மொயின் பெயரை வைத்து, ராபின் மொயின் வழக்கு என்றே இந்த வழக்கு அழைக்கப்பட்டுவந்தது.

 

வழக்கின் முடிவில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளியான ராபின்மெயினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

பல ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராபின் மொயினுக்கு தற்போது 72 வயதாகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.