Show all

செம்மரக்கடத்தலில் விமான பணிப் பெண்

செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த விமான பணிப் பெண்ணை சித்தூர் காவல்துறையினர் கொல்கத்தாவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சித்தூர் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்டதாக கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்தனர். மேலும், கடந்த 2015ம் ஆண்டு அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில், லட்சுமணனின் 2வது மனைவி சங்கீதா சட்டர்ஜி மூலம் செம்மரக்கடத்தல் வியாபாரிகளிடம் பணப் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இவரும் கொல்கத்தாவை சேர்ந்தவர். இதையடுத்து, டிஎஸ்பி ஆதிநாராயணா தலைமையில் காவல்துறையினர் சங்கீதா சட்டர்ஜியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில், கொல்கத்தாவில் கடந்த 7ம் தேதி அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் விமான பணி பெண்ணாகவும், மாடலிங் செய்வதோடு செம்மரக்கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து சித்தூர் காவல்துறையினர் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவரின் 6 வங்கி கணக்குகளை முடக்கி லாக்கரை கைவசப்படுத்தியுள்ளனர். சங்கீதா சட்டர்ஜி மீது நீன்றா, குடிபாலா, யாதமரி, கல்லூரூ காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் அவரை சித்தூருக்கு அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.