Show all

மக்களுக்கு அரசைக் கேள்விகேட்கும் உரிமையே ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும்: மோடி.

மக்களுக்கு அரசை கேள்வி கேட்கும் உரிமை கிடைக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பத்தாம் ஆண்டு விழா இன்று தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

ஆட்சிமுறையில் சாதகமான மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தக் காலத்தில் ஆட்சி தொடர்பான ரகசியத்துக்கு இடமில்லை என்பதால் அரசில் அதிக வெளிப்படைத்தன்மை, மக்களுக்கு உதவிகரமாக அமையும்.

தகவல் அறியும் உரிமைத் தொடர்பான பதில்கள் விரைவாகவும், வெளிப்படையாகவும், சிரமமில்லாததுமாக அமைய வேண்டும். இது, தவறுகளைக் குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

அரசைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும்,

இதன்மூலமாக, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரிக்கும்.

கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தினால் ஆட்சியில் மாற்றம் ஏற்படாது. அந்த கேள்விகளை சீராய்வு செய்து, கொள்கையளவில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளதா? என நாம் சிந்திக்கவும் வேண்டும்.

நல்லதொரு ஆட்சியை உறுதிப்படுத்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியையும் மிக தீவிரமானதாக கருதி, ஒவ்வொரு துறையும் அவற்றுக்கு சரியானபடி விளக்கம் அளிக்க வேண்டும்.

தகவல் அறியும் சட்டத்தின் மையநோக்கமே வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதுதான். நிர்வாகப்பணியில் ரகசியத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமே இல்லை. நாட்டில் நடக்கும் ஆட்சி தொடர்பான அனைத்தும் இணையவழியில் வெளியானால், வெளிப்படைத்தன்மை தானாகவே உயரும். நம்பிக்கையும் அதிகரிக்கும். அரசின் கொள்கைகளை மறுஆய்வு செய்யவும் இந்த தகவல் அறியும் சட்டம் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.