Show all

சவுதிஇளவரசர் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதற்காக கைது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் நேற்று சவுதி  இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் உட்பட 5 பேரை 40 சூட்கேஸ்களில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதற்காக போலீசார் கைது செய்தனர்.

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் செல்லும் தனியார் விமானம் புறப்பட லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் 40 சூட்கேஸ்களில் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி உடனடியாக அந்த விமானத்தை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர். அவற்றில் கொக்கைன் என்ற போதை பொருளும், கேப்டகான் என்ற போதை மாத்திரைகளும் இருந்தன. அவற்றை ஒரு கும்பல் சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை சுற்றி வளைத்து விமான நிலைய போலீசார் அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் போதை மருந்து மற்றும் மாத்திரைகளை சவுதி அரேபியாவைச் சேர்ந்த 5 பேர் கடத்த முயன்றதாகவும், அவர்களில் மிக முக்கியமான நபர் சவுதி அரேபியா இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் என்றும், தெரியவந்தது.

அவருடன் சேர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரும் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்ததாகவும் அவர்களை கைது செய்து தற்போது, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், 40 சூட்கேஸ்களில் 2டன் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் இருந்ததாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.