Show all

சிறார் குற்றவாளிகள் வயதை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதா

நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறித்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு வெகு நாட்கள் ஆன நிலையில், இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பல்வேறு விவகாரங்களால் மாநிலங்களவை முடங்கியிருந்த நிலையில், இன்று மதியம் அனைத்துக் கட்சியினரும், ஒரு மனதாக இந்த மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள ஒத்துழைத்துனர்.

சிறார் குற்றவாளிகள் வயதை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது சிறுவர்களை இளைஞர்களாக கருதி அவர்களுக்கு தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தங்கள் இந்தப் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மிகக் கொடுங் குற்றம் புரியும் சிறார்களை அடைத்து வைக்க போர்ட்டல்ஸ் என்ற தனி இடம் உருவாக்கப்படும். அவை தற்போது இல்லை, புதிதாக உருவாக்கப்பட உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறார்கள், 21 வயது ஆகும் வரை இந்த போர்ட்டல்ஸ்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, அவர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

அவர்களது நடத்தை பரிசீலிக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடும் குணம் இருந்தால் அவர்களது தண்டனைக் காலம் வரை அவர்கள் அந்த போர்ட்டல்ஸ்களிலேயே அடைத்து வைக்கப்படுவார்கள்.

தற்போதிருக்கும் சட்டம், சிறார் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே உள்ளது. சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது மிக வேகமாக அதிகரித்துள்ளது. சிறார்கள் காவல்நிலையங்களுக்கு சென்று நாங்கள் கொலை செய்து விட்டோம், எங்களை சிறார் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் என மேனகா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறார்கள், சிறார்களுக்கு எதிராக குற்றங்களை இழைக்கும் போது, நாம் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவோமா? அல்லது குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவோமோ? என்று கேள்வி எழும்புகிறது என உணர்வுப்பூர்வமாகப் பேசினார் மேனகா காந்தி.

நாட்டை  உலுக்கிய மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை  வழக்கில் சிறார் குற்றவாளி மூன்று ஆண்டுகள் டெல்லி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட பிறகு தண்டனை காலம் முடிந்து விடுதலையாகியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.