Show all

டாஸ்மாக் கடைகளுக்கும் அம்மா பெயர் வைக்க வேண்டியதுதானே?

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ்நாட்டின் தலை விதி மாற்றப்பட்டிருக்கும். மாற்றப்பட்டாக வேண்டும். அந்தத் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டின் தலைவிதியே மாற்றப்பட்டு விடும். ஏன், தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி அம்மா நாடு என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள்!

தற்போது அம்மா பெயர் இல்லாத திட்டங்கள் ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறதா?, டாஸ்மாக் கடைகளுக்கும் அம்மா பெயர் வைக்க வேண்டியதுதானே?

தமிழ்நாட்டிலே ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? சட்டமன்றம் என்ற ஒன்று இருக்கிறதா? அங்கே எதிர்க் கட்சிகள் இயங்க இடம் அளிக்கப்படுகிறதா? அரசை எதிர்த்து யாராவது ஒரு வார்த்தை கூற வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? கடந்த ஒரு மாதமாக சட்டப்பேரவை நடைபெற்றிருக்கிறது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் எனது தலைமையிலான அரசு என்று பேச்சுக்குப் பேச்சுச் சொல்லிக் கொள்வதிலும், நான் ஆணையிட்டேன் என்று தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வதிலும்தான் நேரம் போகிறது. அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதாவது முதல்வர் அவையிலே இருக்கிறாரா? பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீதுள்ள நடவடிக்கையை ரத்து செய்து, ஜனநாயக மரபுகளைச் சற்று எண்ணிப் பார்த்து, அந்தக் கட்சி உறுப்பினர்களையும் அவை விவாதத்திலே பங்கேற்கச் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் தரவில்லை.

பேரவை நடக்கும் போது, அரசின் சார்பாக முக்கியமான அறிவிப்புகளை அவையிலேதான் செய்வது வழக்கம்.

ஆனால் முதலீட்டாளர் மாநாடு சம்மந்தமான முக்கியமான அறிவிப்புகளை எல்லாம் முதலமைச்சர் பேரவையில் தெரிவிக்காமல், அந்த மாநாட்டில் அறிவித்தார். ஒருவேளை அவர்களே, அவற்றையெல்லாம் முக்கியமான அறிவிப்புகளாகக் கருதவில்லையோ என்னவோ? 110வது விதியின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த அந்த அறிவிப்புகள் என்னவாயிற்று என்று விரிவாகக் கேட்டிருந்தேன். அதற்கு எந்தப் பதிலும் அரசுத் தரப்பில் இதுவரை சொல்லவில்லை.

எல்லா அமைச்சர்களின் துறைகள் பற்றிய அறிவிப்புகளையும் முதலமைச்சரே படிக்கிறார். முக்கியமான பெரும் திட்டங்களையெல்லாம் கூட முதலமைச்சர் நேரில் செல்லாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகத் தொடங்கி வைக்கிறார்.

கடந்த நான்காண்டு காலமாகத் தூங்கி விட்டு, தற்போது பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் திடீரென்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டுவதாக அறிவித்து, அதுவும் கேலிக் கூத்தாக முடிந்துள்ளது.

யாரும் இந்த ஆட்சியை நம்பி - ஆட்சியாளர்களின் வெற்று வார்த்தைகளை நம்பி, தொழில் தொடங்குவதாக இல்லை. ஆனால் ஆட்சியினரின் கெஞ்சலுக்கு இசைந்து பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதாக ஒருசிலர் அறிவித்திருக்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.