Show all

தொடர்வண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; பாஜக மேலவை உறுப்பினர் கைது

ஓடும் தொடர்வண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிகார் பாஜக மேலவை உறுப்பினர் துன்னாஜி பாண்டே இன்று கைது செய்யப்பட்டார். பிகார் மாநில பாஜக மேலவை உறுப்பினராக இருப்பவர் துன்னாஜி பாண்டே. இவர் நேற்றிரவு துர்காபூரில் இருந்து காஜிபூருக்கு பூர்வாஞ்சல் விரைவு தொடர்வண்டியில் பயணம் செய்தார். அப்போது, அதே தொடர்வண்டி பெட்டியில் தந்தையுடன் இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இதையறிந்த பாண்டே, அந்தப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததுடன், அந்தப் பெண்ணை அவதூறாக பேசி உள்ளார். பாண்டே மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த தந்தை காவல்துறைக்கு ரகசியமாக புகார் அளித்தார். இதையடுத்து, இன்று காலை வைசாலி மாவட்டம் ஹாஜிபுர் தொடர்வண்டி நிலைய காவல்துறையினர் பாண்டேயை கைது செய்து, தொடர்வண்டி துறை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தபடுத்தப்பட்டார், இவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி; உத்தரவிட்டார். இந்நிலையில், பாஜக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் அவரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிகார் மாநில பாஜக துணைத்தலைவர் சஞ்சய் மாயுக் தெரிவித்துள்ளார். மேலும், பொது வாழ்வில் ஈடுபடுவோர் தரத்தையும், தூய்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்பதை பிறரும் உணந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பாண்டே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.