Show all

'ஒற்றுமை சிலை' என நடுவண் அரசு பெயரிட்டாலும், ஒட்டு மொத்த இந்தியா அங்கிகரிக்கும் தலைவராக சர்தார் வல்லபாய் படேல் இல்லையே

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒற்றுமையின்சிலை என்று பெயர் வைத்து நடுவண் அரசு சர்தார் வல்லபாய் படேல் சிலையை உலக உயரச்சிலையாக திறக்கப்பட்டதில், இந்தியா முழுக்க ஒற்றுமையான அங்கிகரிப்பு இல்லாமல், ஒவ்வொரு  மாநிலங்களுக்கு இடையே பெரிய உயரமான சிலை மற்றும் கட்டிடங்களை கட்ட போட்டியே தொடங்கியுள்ளது. திடீரென்று பாஜக, சர்தார் வல்லபாய் படேல் பெயரை உச்சத்திற்கு கொண்டு வர முயல்வதாகவே இந்தியா முழுக்க கருத்து எழுகிறது. 

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே அரபிக் கடலில், மராட்டிய அரசு சார்பில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான  நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடம், 3,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், குதிரைமீது சிவாஜி அமர்ந்திருப்பது போல 210 மீட்டர் உயரத்துக்கு சிலை அமைக்கப்படுகிறது.  இந்தச் சிலையின் உயரத்தை மேலும் 2 மீட்டர் அதிகரிக்க, மராட்டிய அரசு இப்போது திடீரென்று முடிவெடுத்துள்ளது.

உத்தரபிரதேச  முதல்வர் யோகி ஆதித்யநாத் 201 மீட்டர்  உயரமுள்ள  ராமர் சிலை கட்டப்படும் என அறிவித்து உள்ளார். கர்நாடக அரசு 125 அடி உயர காவேரி அன்னை  சிலை அமைக்கப்படும் என அறிவித்து உள்ளது.

தற்போது, பட்டேல் சிலையை விட உயரமாக 250 மீட்டரில் ஆந்திர சட்டமன்றக் கட்டிடத்தை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டமிடுவதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

தற்போது  ஆந்திராவில் அமைய உள்ள அமராவதி தலைநகரில்  250 மீட்டர் உயரம் உள்ள ஆந்திர சட்டமன்றக் கட்டிடத்தை கட்ட திட்டமிட்டு உள்ளார் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபு நாயுடு கட்ட திட்டமிட்டு உள்ள சட்டமன்றக் கட்டிடத்தின் வரைபடம் கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இங்கிலாந்தை சேர்ந்த  நோர்மா போஸ்டரஸ் என்ற நிறுவனம்  அதற்கான  கட்டிட வரைபடத்தை அரசிடம் சமர்பித்து உள்ளது. இந்த கட்டிடம் 3 அடுக்கு மாடிகளை  கொண்டது. கோபுரம் 250 மீட்டர் உயரத்தில் வானத்தை தொடுவது போல் உள்ளது.

அமராவதியில் கட்டப்படும்  சட்டமன்றம் மற்றும் செயலக கட்டிடங்களின் கடைசி வடிவமைப்புகள்  சந்திரபாபு நாயுடுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து  நகராட்சி நிர்வாகம் அமைச்சர்  நாராயணா கூறியதாவது: சந்திரபாபு நாயுடு கட்டியெழுப்பும் கட்டிடம் தலைகீழான அல்லிப் பூவைப் போன்ற வடிவமாக இருக்கும். இந்த கட்டிடம் இரண்டு காட்சியகங்களை கொண்டு இருக்கும். முதல் காட்சியகம் 80 மீட்டர் உயரத்தில் இருக்கும்.  இதில் 300 பேர் அமராவதி நகரின் அழகை  கண்டு ரசிக்கலாம்.  2வது காட்சியகம் 250 மீட்டர் உயரத்தில் இருக்கும்.  இதில் 20 பேர் அமராவதி நகரின் அழகை  கண்டு ரசிக்கலாம்.  2 வது காட்சியகம் மின்தூக்கி வசதியுடன்  கண்ணாடியால் மூடப்பட்டு இருக்கும்.   இந்த கட்டிடம்  புயல் மற்றும் நிலநடுக்கங்களை  தாங்க கூடியதாக அமையும்.

முதல் அமைச்சர் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை பரிந்துரைத்து உள்ளார். இது இன்னும் இரு நாட்களில் தயாராகி விடும் என கூறினார்.

ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட  மூலதன மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அண்மையில்  திறக்கப்பட்ட 'ஒற்றுமை சிலை' என நடுவண் அரசு பெயரிட்டாலும், பாஜகவைத் தவிர ஒட்டு மொத்த இந்தியா அங்கிகரிக்கும் தலைவராக சர்தார் வல்லபாய் படேல் இல்லையென்பது தெளிவாகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.