Show all

மக்கள் தனிஉரிமை பாதுகாக்கப்படுவதில் சமரசம் செய்வது ஆபத்தை உண்டாக்கும்: ஷ்யாம்திவான்

இந்தியாவில் ஆதார் அட்டை பயன்பாட்டை மேலும் ஒரு சில திட்டங்களுக்கு விரிவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடுவண் அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல்சாசன அமர்வு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம், ஓய்வூதிய திட்டங்கள், வங்கிக் கணக்கு திட்டங்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு ஆதார் அட்டையின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதே வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் 7 ஆம் தேதி நடைபெற்ற போது தான், வங்கி கணக்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் அப்போதுதான் இது தொடர்பான விசாரணைகள் அரசியல்சாசன அமர்வில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையின் போது, மத்திய ரிசர்வ் வங்கி, செபி எனப்படும் பங்குச்சந்தை முதலீடு குறித்த வாரியம் மற்றும் ஒரு சில இந்திய மாநில அரசுகள் உள்ளிட்டோர் தங்களது குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஆதார் அட்டை பயன்பாடு அவசியம் என கூறி வாதிட்டார்கள்.

நடுவண் அரசின் வாதத்தின் போதும் ஆதார் அட்டையின் பயன்பாட்டின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு சில மக்கள் நல திட்டங்களில், மக்கள் விரும்பினால், அவர்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்து வாதிடுவோர், தனி மனித உரிமை பறிக்கப்படுவதாக குற்றம் சட்டி வருகிறார்கள். இது தொடர்பான வாதங்கள் அரசியல்சாசன அமர்வு முன்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய மக்கள் அனைவரது தனிஉரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ஷ்யாம் திவான், இந்த விவகாரத்தில் சமரசம் செய்வது ஆபத்தை உண்டாக்கும் என இன்று குறிப்பிட்டார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.