Show all

சபாநாயகர் சக்தன், தான் அணிந்திருந்த செருப்பின் வாரை கழற்ற, காரோட்டியிடம் பணித்தது சர்ச்சையான

கேரள சட்டசபை வளாகத்தை யொட்டி உள்ள இடத்தில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. இது இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டதாகும். இந்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து நேற்று அறுவடை செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சபாநாயகர் சக்தன் மற்றும்  சட்டசபை ஊழியர்கள் அங்கு திரண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக விவசாயத்துறை அமைச்சர் மோகனனும் கலந்து கொண்டார். இந்த அறுவடை குறித்த நிகழ்ச்சியை சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களும் குவிந்தனர்.

சபாநாயகர் சக்தன், அமைச்சர் மோகனன் ஆகியோர் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுத்தனர். பின்னர் நெற்கதிரை மிதிப்பதற்காக சபாநாயகர் சக்தன், தான் அணிந்திருந்த செருப்பின் வாரை கழற்றுமாறு, தனது கார் டிரைவரிடம் கூறினார். இதையடுத்து டிரைவர் குனிந்து, சபாநாயகர் சக்தனின் செருப்பு வாரை கழற்றினார். இந்தச் சம்பவம்  பத்திரிகையாளர்கள் மற்றும் அமைச்சர் மோகனன் முன்னிலையில் நடந்தது. இந்தக் காட்சியை அங்கிருந்த பத்திரிகைகாரர்கள் படமெடுத்தனர்.

இந்நிலையில் இந்தப் புகைப்படம் இன்று ஒரு மலையாள நாளிதழில் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபாநாயகரின் இந்தச் செயலுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன், உத்திரபிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தனது செருப்பில் இருந்த சகதியை ஒரு அதிகாரியை வைத்து துடைத்தார். இந்தச் சம்பவம் அப்போது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கேரளாவில் நடந்த இந்தச் சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.