Show all

செம்மரம் வெட்ட தமிழர்களை அழைத்துச்செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட தமிழகத் தொழிலாளர்களை அழைத்து செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

ஆந்திராவிற்கு, செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழர்கள் 516 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், பழங்குடியினர் மற்றும் கல்வியறிவு இல்லாத பிழைப்புக்காக இந்தப் பணியினைச் செய்பவர்கள். ஆந்திரா போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழர்கள் பிணையில்; விடுதலை ஆக வாய்ப்பு இருந்தும், சட்ட உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பிணை வாங்கித் தருவதாக அவர்கள் ஏமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள தமிழர்களை பிணையில்; விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட தமிழகத் தொழிலாளர்களை அழைத்து செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். கடிதம் எழுதாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறி உள்ளார். தரகர்கள் ஏழை விவசாயிகளையும், தொழில் தெரியாதவர்களையும் ஏமாற்றி ஆந்திராவிற்கு அழைத்து செல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். ஆனால் இவர்களுக்கு பின்னால் பெரிய புள்ளியாக இருப்பவர்கள் யார் என்று தெரியாத நிலையே நீடித்து வருகிறது. ஆந்திரா போலீசாரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு யார் இந்தத் தொழிலைச் செய்கிறார் என்பது தெரிவது இல்லை. இப்பணியானது 4-5 பேர்களை கடந்து பின்னர் தொழிலாளர்களிடம் வருகிறது..

இதற்கிடையே தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். தமிழர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை நிராகரித்து உள்ள ஆந்திரா, காட்டை பாதுகாக்க அனைவரையுமே கைது செய்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.