Show all

ரூ.5,000 கோடி ஹவாலா பணம் தாவூத் இப்ராகிமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ.

ரூ.5,000 கோடி ஹவாலா பணம் தாவூத் இப்ராகிமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

வெளிமாநிலங்களில் ரூ.4,500 கோடி அளவுக்கு லாட்டரி முறைகேடுகள் நடந்து இருப்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், சாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக மார்ட்டினுக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.நாகராஜன் என்பவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, நாகராஜனின் பாஸ்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜன் பல வருடங்களாக போலி லாட்டரி நடத்தி, பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம். இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர், மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்தி வருவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது, அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேற்கு வங்க ஹவாலா கும்பல், பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பியுள்ளனர். இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.