Show all

ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி...

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டுமானால் முதலில் ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அனல் பறக்கும் சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவில் கடந்த சில நாட்களாக மோடி மற்றும் பாஜக தலைவர்களுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியே கடும் குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். இது பாஜவுக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் பாட்னாவில் நடைபெற்ற ஒரு பதவி ஒரே ஓய்வூதிய கொள்கையை வலியுறுத்தி நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினர் நிகழ்ச்சியில் ராம் ஜெத்மலானி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாட்டின் தலைவராக பிரதமர் மோடியை பரிந்துரை செய்ததற்கு பரிகாரம் தேடி இங்கு வந்துள்ளேன்.

மோடியும், ஜெட்லியும் சேர்ந்து செய்த மோசடிக்கு நான் பலியாகி விட்டேன். வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க முந்தைய காங்கிரஸ் அரசும், தற்பாதைய பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசும் எதுவும் செய்யவில்லை. இதற்கு முழுக்க முழுக்க ப.சிதம்பரமும், அருண்ஜெட்லியும் தான் காரணம். இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் கருப்பு பணத்தை மீட்க முடியும். வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய, 1,400 நபர்களின் பட்டியல், ஜெர்மன்  நாட்டு அரசிடம் இருந்தது. எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து கடிதம்  அனுப்பினால் அப்பட்டியலை தருவதற்கு, ஜெர்மன் தயாராக இருந்தது. இதுதொடர்பாக,  பா.ஜ. தலைவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், ஜெர்மனுக்கு கடிதம் அனுப்ப  அவர்கள் தயாராக இல்லை. இவற்றின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.90 லட்சம் கோடி ஆகும். அவர்களின் தோல்விக்கு பீகார்தான் ஒரு தொடக்க புள்ளி. எனவே பீகார் மக்கள் பாஜவை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்றார். ராம்ஜெத்மலானியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.