Show all

தமிழக அரசு வழங்கவுள்ள ரூ. ஆயிரம் பொங்கல் பரிசு அரிசி அட்டையாளர்களுக்கு மட்டுந்தானாம்! அறங்கூற்றுமன்றத் தடை காரணம்

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு பெங்கல் பரிசாக, குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு எதிராக- கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்கிற நபர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார். 

அந்த மனுவில், தமிழக அரசின் தற்போதைய வரி வருவாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி ரூபாயாகவும், மொத்த கடன், 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு 43 ஆயிரத்து 962 கோடி ரூபாய் கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவது, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு,  அறங்கூற்றுவர்கள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அணியமான அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் அறங்கூற்றுவர் எழுப்பிய கேள்விக்கு, திட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாவதாக அவர் தெரிவித்தார்.

அறங்கூற்றுவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய்  பொங்கல் பரிசு வழங்கக்கூடாது எனவும், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.  மேலும், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்க தடையில்லை எனவும் அறங்கூற்றுவர்கள் கூறினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,027.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.