Show all

சுவாதி கொலை வழக்கை சிலர் திசை திருப்ப முயற்சியா

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிலர் திசை திருப்ப முயற்சிப்பதாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் வந்துள்ள யுவராஜ், சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக கட்செவி அஞ்சல் மூலம் ஒலித்தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சுவாதி கொலை வழக்கை தலைவர்கள் சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அவர்களின் பேச்சால் சுவாதியின் பெற்றோர் வேதனை அடைந்து வருகின்றனர். சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு ராம்குமாரை பிடித்துள்ளனர். அவர்தான் உண்மையான குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை காவல்துறையினர் முழுமையாகத் திரட்டியுள்ளனர். எனவே சாதி, மதப் பிரச்னையில் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தலைவர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கட்செவி அஞ்சல் மூலம் ஒலித்தொகுப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த யுவராஜ், தற்போது சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக மீண்டும் கட்செவி அஞ்சல் மூலம் ஒலித்தொகுப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.