Show all

அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு

நடுவண் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்த நடவடிக்கையில் விதிகளை மீறியதாக சிபிஐ தொடுத்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து, தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது

நடுவண் சுகாதாரத் துறை அமைச்சராக 2004முதல் 2009ஆம் ஆண்டு வரை அன்புமணி ராமதாஸ் இருந்தார்.

அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-ஆராய்ச்சி மையத்துக்கு அங்கீகாரம் புதுப்பித்த நடவடிக்கையில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இவற்றில், இந்தூர் மருத்துவக் கல்லூரி விவகார வழக்கில் அன்புமணி உள்பட 10 பேர் மீதும், ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி விவகார வழக்கில் அன்புமணி உள்பட 5 பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.