Show all

ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி விற்பனைக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்; மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய தினமான பக்ரீத் பண்டிகை வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த தலைவர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் செப்டம்பர் 25 ஆம் தேதி வருகிறது. எனவே அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளை திறந்து வைத்து ரத்த தானம் முகாம்களை நடத்துமாறு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விருப்பப்பட்டால் முஸ்லீம் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ள ராஜஸ்தான் அரசு அதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

ராஜஸ்தானில் சூரிய நமஸ்காரம், யோகா பயிற்சி, ஆகியவற்றை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்கியுள்ள நிலையில், இப்போது பக்ரீத் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பக்ரீத்திற்கு விடுமுறை இல்லை என்ற அரசின் உத்தரவிற்கு முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.