Show all

மைசூருவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக்கொலை

மைசூருவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நேற்று மைசூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூரு டவுன் நரசிம்மராஜா தொகுதி உதயகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கேத்தமாரனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜூ (அகவை33). இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் ராஜூ உதயகிரி ராஜ்குமார் சர்க்கிளில் உள்ள ஒரு தேநீர்கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென்று வாளால் ராஜூவை சரமாரியாக வெட்டினார். பின்னர் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ராஜூ ரத்த வௌ;ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், பா.ஜனதாவினரும் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள், ராஜூவை வெட்டிக் கொலை செய்த கொலையாளியை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

 

இந்தக் கொலை பற்றி உதயகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவான மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜூ முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை ராஜூவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜூவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கேத்தமாரனஹள்ளியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு முன்னாள் மந்திரி ராமதாஸ், சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 

இதற்கிடையே ராஜூ கொல்லப்பட்டதை கண்டித்தும், கொலையாளியைக் கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று மைசூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் அறிவித்தன. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மைசூரு நகர் முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறை கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டிருந்தார். மேலும் போராட்டங்கள், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த உத்தரவை மீறி மைசூருவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.