Show all

பல்வேறு சலுகைகளோடு வந்துவிட்டது ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு

இலவச அழைப்புகள், குறைந்த விலையில் இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ (ஆர்-ஜியோ) அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இதுகுறித்து மேலும் கூறியதாவது: குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் இணையச் சேவையை கிடைக்கச் செய்வதே எங்களது முதன்மையான குறிக்கோளாகும். இதன் காரணமாகவே, தற்போதுள்ள கட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அடிப்படைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே. 15 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை வழங்கப்பட்டு அந்த சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதனை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சோனி, சான்சூயி, விடியோகான், எல்.ஜி, சாம்சங், மைக்ரோமேக்ஸ் பானாசோனிக், அசூஸ், டி.சி.எல், அல்காடெல் நிறுவனங்களின் 4ஜி ஸ்மார்ட்போன்களில் ஆர்-ஜியோ சேவை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் அறிமுக சலுகையாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், எங்களின் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்வதோடு கட்டணமில்லா ரோமிங் சலுகையையும் பெறலாம். அதன் பிறகு, ஒரு நாளைக்கு ரூ.19 முதல் மாதத்துக்கு ரூ.4,999 வரையிலான 10 வகை கட்டணங்களை வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதை தவிர மாணவர்களுக்கு 25விழுக்காடு கூடுதல் இணையவசதி, 10 லட்சம் வைஃபை வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. மிகக் குறுகிய கால அளவில் 10 கோடி வாடிக்கையாளர்களைக் கவருவதே எங்களின் இலக்கு. அதற்கேற்ப, அனைவரும் வாங்கக் கூடிய வகையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை ரூ.2,999லிருந்து எல்.ஒய்.எப். பிராண்டின் கீழ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.