Show all

ராகுல் காந்தி இங்கிலாந்து இந்தியா என இரட்டைக் குடியுரிமை பெற்றவரா

இரட்டைக் குடியுரிமை பிரச்சனைத் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற நன்னெறிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

கடந்த ஆண்டு இறுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரது எம்.பி பதவியை ரத்து செய்வதோடு, அவரது இந்திய குடியுரிமையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், அவர் மக்களவைத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

 

மேலும், ராகுல் காந்தியின் இந்த இரட்டைக் குடியுரிமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. மகேஷ் கிரி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதினார்.

 

சுமித்ரா மகாஜன், இகுறித்து விசாரிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையிலான நன்னெறிக் குழுவுக்கு அனுப்பினார்.

 

இதை விசாரித்த அத்வானி தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு, இரட்டை குடியுரிமை குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியது.

 

லண்டனிலிருந்த போது ராகுல் காந்தி எவ்வாறு இங்கிலாந்து குடிமகன் என குறிப்பிட்டார் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என நன்னெறிக் குழுவின் உறுப்பினர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, நாடாளுமன்ற நன்னெறிக் குழு வழங்கிய நோட்டீஸை எதிர்கொள்வோம் என்றார்.

 

நாட்டில் நிலவும் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே பாஜக அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

ராகுல் காந்தி குடியுரிமை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.