Show all

தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி பெறும் திட்டம்.

தனிநபர்களிடம் தேங்கிக் கிடக்கும் தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி பெறும் திட்டம் மற்றும் மத்திய அரசின் தங்கம் கடன் பத்திரம் ஆகிய திட்டங்களுக்கு நடுவண் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விதமான சேமிப்பில் தங்கம் பூட்டி வைக்கப்படுவதால், வங்கி சேமிப்புகளை போல் முதலீடுகளுக்கு கிடைப்பதுபோன்ற வட்டி, இந்த தங்க சேமிப்புக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

இந்த நிலையை மாற்றி, தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என,

முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில், இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அவற்றில் ஒன்று,

தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம்.    

மற்றொன்று,

அரசு தங்கம் கடன் பத்திரம் (சாவரின் கோல்டு பாண்டு) தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதில் இந்த கடன் பத்திரத்தை வாங்கலாம். இவற்றின் மீது வட்டி வழங்கப்படும். தங்கம் அல்லது பணம் தேவைப்படும் போது, பத்திரத்தை கொடுத்துவிட்டு, அன்றைய விலையில் தங்கமோ அல்லது அதற்கு நிகரான பணத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இரு திட்டங்களுக்கும் நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நடுவண் நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

சாவரின் கோல்டு பாண்டு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு தனிநபரும் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் என அதிகபட்சமாக

அரை கிலோ தங்கத்துக்கு நிகரான பணத்தை முதலீடு செய்யலாம்.

நிரந்தர வைப்பு தொகையைப் போல் ஐந்தில் இருந்து ஏழாண்டு கால முதிர்வுக்கு பிறகு வட்டியுடன் முதலீடு செய்த தொகையை தங்கமாகவோ, ரொக்கமாகவோ பெறலாம். இந்த சாவரின் கோல்டு பாண்ட் பத்திரங்கள் முக்கிய தபால் நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.