Show all

பிரியங்கா வெளிச்சம் பயன்தருமா! பிரியங்காவுக்கு கட்சிப் பதவி வழங்கிய ராகுல் காந்தி

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத பாஜகவை அப்புறப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசுக்கு முதன்மையான பொறுப்பு இருக்கிறது. நேரடியாக காங்கிரசை ஆதரிக்க இந்திய மக்கள் தயாராக இல்லை. அதனால் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை காங்கிரஸ் செவ்வனே செய்து வருகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு சிறிய சறுக்கல். உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணியில் இடம்பெறத் தீர்மானித்திருந்தது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சியால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஊழலில் பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான் எனக் கூறி காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டனர் அகிலேசும், மாயாவதியும். கூடவே மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடத் தீர்மானித்துள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சிகளைப் பலப்படுத்துவதிலும், கூட்டணிகளை இறுதி செய்வதிலும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பதிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

கடந்த முறை தேர்தலில் மக்கள் காதில் பூ சுற்றுவதற்கு மேற்கொண்ட உபாயங்கள் போல் ஏதாவது உபாயம் கிடைக்காதா என்று அறைபோட்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதேநேரம் மக்கள்விரோத பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. இதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மெகா கூட்டணி அமைப்பதிலும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்திக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நேரடி அரசியலில் களம் இறங்காமல் இருந்து வந்த அவரை நேரடி அரசியலில் ஈடுபட வைக்கும் வகையில் இந்தப் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்து ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் தாங்கள் எதிர்பார்த்த கூட்டணி கை நழுவியதால், தனித்துப் போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசம் மாநிலம் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,042.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.