Show all

கீச்சுவில் இணைந்தார் பிரியங்கா காந்தி! சில நிமிடங்களில் ஒரு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் பேர்கள் பின்தொடர்ந்தனர்

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரபல சமூக வலைதளமான கீச்;சுவில் இணைந்துள்ளார்.

பிரியங்கா காந்தி நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத் தரப்பட்டது.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில், இந்த நியமனம் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

அமேதி, ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் சோனியா, ராகுலுக்காகப் பிரச்சாரம் செய்து அனுபவம் பெற்றுள்ளார் பிரியங்கா. கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சிப் பணிகளைக் கவனிக்கவும் ராகுல் காந்திக்கு உதவவும் பிரியங்கா தேவைப்படுகிறார்.

இதனிடையே தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். அன்றாட நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராயத்தால் மக்கள் இறப்பது குறித்து பிரியங்கா காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான கீச்சுவில் இணைந்துள்ளார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி வதேரா என்ற பெயரில் கீச்சு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைப் பின்தொடர்கிறார். அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே படபடவென ஒரு இலட்சத்து ஐம்பத்;தைந்தாயிரம் அவரைப் பின்தொடரத் தொடஙகினர். 

விரைவில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் சூழலில்  பிரியங்கா காந்தி சமூக வலைதளத்தில் இணைந்திருப்பது அரசியல் தலையாயத்துவம் பெற்றுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,061.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.