Show all

வேளாண் வருவாய்க்கு வரி விதிக்கும் திட்டத்திற்கான பீடிகைகள்

வரி செலுத்தக்கூடிய வருவாயை, வேளாண் வருவாயாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யும் முக்கிய நபர்கள் பற்றி விசாரணை நடக்கிறது என மாநிலங்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

வேளாண் மூலம் கிடைக்கக் கூடிய வருவாய்க்கு, வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படுவதில்லை. இதனால் பலர் வரி செலுத்தக் கூடிய வருவாய் மற்றும் கருப்பு பணத்தை வேளாண் வருவாயாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றனர்.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் நேற்று எழுப்பின. ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சரத்யாதவ் பேசுகையில்,

ரூ.2 ஆயிரம் லட்சம் கோடி வருவாய் மறைக்கப்பட்டு, வேளாண் வருவாயாக கணக்கு காட்டப்படுகிறது. இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில்,

கருப்புப் பணத்தை வேளாண் வருவாயாக கணக்கு காட்டுபவர்கள் பற்றி உயர்நிலைக் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி,

வரி செலுத்தக் கூடிய வருவாயை மறைத்து வேளாண் வருவாயாக கணக்கு காட்டும் முக்கிய பிரமுகர்கள் பற்றி விசாரணை நடக்கிறது. அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டால், அதை அரசியல் பழிவாங்கும் செயல் என கூறக்கூடாது. நாட்டில் உள்ள வேளாண் நிலையை கருத்தில் கொண்டு, வேளாண் வருவாய்க்கு வரி விதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை’’ என்றார்.

காங்கிரஸ் எம்.பி திக்விஜய் சிங் பேசுகையில்,

எங்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, வரி ஏய்ப்பு செய்பவர்களின் பெயரை நிதியமைச்சர் வெளியிட வேண்டும் என்றார்.

அருண் ஜெட்லி பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தொடர்ச்சியாக இப்பிரச்னையை எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன்,

சரத் யாதவ் முக்கிய பிரச்னையை எழுப்பினார். அதற்கு நிதியமைச்சர் பதில் அளித்துவிட்டார். இதுகுறித்து உறுப்பினர்கள் மேலும் விவாதிக்க முயன்றால் நோட்டீஸ் கொடுங்கள் என்றார்.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு விவசாய வருமானம் உள்ளதாக தெரிவித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வசிப்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில்தான். இந்தியாவில் விவசாய மூலம் கிடைக்கும் ஆதாயம், வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. ஆனால் சமீப காலமாக வரி கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களில் பலர் தங்களுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

2007-08 முதல் 2015-16 ஆம் ஆண்டு வரை 2,746 பேர் விவசாய வருமானம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் உள்ளதாக கூறியுள்ளனர். தங்களின் கருப்புப் பணத்தை வௌ;ளையாக்கவும், வரி ஏய்ப்புக்கும் இதை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. 

   

2007-08 முதல் 2015-16 வரையிலான வருமான வரி மதிப்பு கணக்கிடும் ஆண்டில், பெங்களூருவில் வசிக்கும் 321 பேர் தங்களின் விவசாய வருமானம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் உள்ளதாக கூறியுள்ளனர். இதே காலத்தில், டெல்லியில் 275 பேரும், கொல்கத்தாவில் 239 பேரும், மும்பையில் 212 பேரும், புனேயில் 192 பேரும், சென்னையில் 181 பேரும், ஐதாராபாத்தில் 162 பேரும், திருவனந்தபுரத்தில் 157 பேரும், கொச்சியில் 109 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் விவசாய வருமானம் உள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வருமான வரித்துறையினர் சில குறிப்பிட்டவர்களின் வருமான வரி கணக்குகளை மறு ஆய்வு செய்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.