Show all

மற்ற இனக் குழுக்களைப் போல் வளர்ச்சி பெற உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

சென்னையில் 3-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக புரவலரும், தொழிலதிபருமான ஜெம் வீரமணி, மாநாட்டின் அமைப்பாளரும், சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களில் சிறந்த தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் என பலரும் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் மற்ற இனக் குழுக்களைப் போல் தமிழர்கள் வளர்ச்சி பெறவில்லை. இதற்கு தொடர்பின்மைதான் காரணம். உலகெங்கும் உள்ள தமிழ் தொழிலதிபர்களை ஒருங்கிணைக்கும் வண்ணம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, சென்னையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதையடுத்து 2 -ஆவது மாநாடு 2011-இல் துபையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து தற்போது 3-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமிருந்து 500-க்கும் அதிகமான தமிழ் தொழிலதிபர்களும், தொழில்முனைவோர்களும் பங்கேற்கவுள்ளனர். கயானா நாட்டின் பிரதமராக உள்ள தமிழர் மோசஸ் வீராசாமி நாகமுத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கவுள்ளார். மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். இதில் நடுவண் அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டில் உலகத் தமிழர் மாமணி என்னும் விருது வழங்கப்படவுள்ளது. தொழில் துறையில் சாதித்தவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசவுள்ளனர். இந்தப் பேட்டியின்போது விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.பி.சந்தோஷம் ஆகியோர் உடனிருந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.