Show all

அதிகாரப் பரவலாக்கத்திற்கு, இந்திய அரசுக்கு முன்னோட்டமாகட்டும்! ஆந்திர மாநிலத்தில் நிர்வாகப் பரவலாக்கத்திற்காக மூன்று தலைநகரங்கள்.

ஆந்திர மாநிலத்தில்- நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், அறங்கூற்றுத்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமுன்வரைவு எளிதில் நிறைவேறும்.

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியஒன்றியத்திற்கு பல தலைநகரங்கள் அமைத்து- அதிகாரத்தையும், நிருவாகத்தையும் பரவலாக்கினால் நாட்டின் பலசிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று பல்வேறுபட்ட அறிஞர்கள் நீண்ட காலமாக முன்மொழிந்து வருகின்றார்கள். 

இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சோழ மன்னர்கள் காலத்தில், ஒன்று மேற்பட்ட தலைநகரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்திருக்கின்றன. இன்றைய நிலையில், அதிகாரப்பரவலாக்கத்திற்கு முற்றிலும் எதிரான கட்சியான பாஜக ஆட்சியில் அது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

இந்த நிலையில், இதே காரணம் பற்றி, ஆந்திர மாநிலத்தில், அந்த மாநிலத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி- நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், அறங்கூற்றுத்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிட்டுள்ளது.  ஆக, மூன்று தலைநகரங்களை உருவாக்குவதற்கான சட்டமுன்வரைவு ஆந்திர மாநில சட்டப்பேரவையில் இன்று பதிகை செய்யப்பட்டுள்ளது.

175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 151 சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் இருப்பதால் மூன்று தலைநகரங்களை உருவாக்குவதற்கான சட்டமுன்வரைவு நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகம் போலான்றி ஆந்திராவில் 58 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்ட மேலவை உள்ளது. அந்தச் சட்டமேலவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு மேலவையில் 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கான சட்டமுன்வரைவு நிறைவேற்றுவது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியில்- தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தச் சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் போராட்ட அமைப்புகளின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.