Show all

காவல் துறையில் மிதிவண்டி ரோந்து பணி இன்று முதல் தொடங்கியது

சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேம்படுத்தும் வகையில்,  100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில் ரோந்துப் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம்  ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய  பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது.

சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்துப் பணியினை மேம்படுத்தவும், மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறுகலான தெருக்களிலும் ரோந்து பணியினை தீவிரப்படுத்தும் வகையிலும், ஜிபிஎஸ் கருவிகள், மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலை தொடர்பு கருவிகள் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே  வழங்கியுள்ளதன் காரணமாக சென்னை பெருநகர காவல்துறையினர் ரோந்துப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேலும் மேம்படுத்தும் வகையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 

 

இந்த ரோந்து பணியில் ஈடுபடும் சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்து காவலர்களுக்கு, தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மேல்சட்டை, தலைக்கவசம் ஆகியவை  வழங்கப்பட்டுள்ளன.  இருசக்கர வாகனங்களிலும், மிதிவண்டிகளிலும் ஒலி எழுப்பான்கள், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  இதன்மூலம் ரோந்து காவலர்கள் குறுகிய தெருக்களிலும், மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இயலும்.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் முறையினை மேலும் நவீனப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, 1 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 உயர் ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கும் அடையாளமாக 5 போக்குவரத்து காவலர்களுக்கு ஜெயலலிதா உயர்ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கினார்கள்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.