Show all

பிரகாஷ் ஜவடேகர் ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்

பிரதமர் மோடி தலைமையில் கூடிய நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று கூடிய நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவை கூட்டம் நேற்று காலை தொடங்கியது.

இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை குறித்த கனடா நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புதல் வழங்கபட்டு உள்ளது. பொலிவுறு நகரங்கள் மேம்பாட்டுக்காக  ப்ளூம் பெர்க் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கும் நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  வரி ஏய்ப்பு மற்றும் வரிகட்டாமல் தவிர்ப்பதை தடுக்கும் வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள வகை செய்யும் இந்தியா-மாலத்தீவு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வந்த நடுவண் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். முன்னதாக ஜல்லிக்கட்டு தொடர்பாக புத்தாண்டு தினத்திற்குள் நல்ல செய்தி வரும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.