Show all

பெரியார் தமிழக அளவில் செய்த வேலைத்திட்டம்! உலக அளவில் பிபிசி கையிலெடுத்துள்ளது

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்று இந்தியாவில் தென் மூலையில் முதலாவதாக  குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். வேத, இதிகாச, புராண புளுகு மூட்டைகளைத் தோலுரித்துக் காட்டியவர் அவர். மனுதர்மம் என்று சொல்லப் பட்ட ஏற்றதாழ்வை அம்பலப் படுத்தியவர். புராணப் புளுகுனிகள் கட்டிக் காத்த சாதிய ஏற்றதாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர். தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன இந்தியாவில் என்பதை தமிழகத்து பட்டி தொட்டி  மக்களைக் கூட அறியச் செய்தவர் பெரியார்.

'அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் தாள், உலகின் சிறந்த ரூபாய்தாளாகச் சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.'
இம்மாதிரியான செய்திகள் நமது செல்பேசிகள் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள். 
சாதரண குடிமக்களின் பார்வையில் போலி செய்திகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பிபிசியின் ஆய்வில் தெரியவந்த முதல் தகவல் இதுவே.

உணர்வுகள் தொடர்பாகவோ அல்லது தனிநபர்களின் அடையாளம் குறித்தோ வரும் செய்திகள் போலியா அல்லது உண்மையா என்று ஆராயாமல் பகிரப்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கீச்சுப் பதிவுகளையும் இந்த அய்வு அலசுகிறது; மேலும், மறையாக்கம் செய்யப்பட்ட செய்தி செயலியான வாட்சப்பிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கான தகவல்களைச் சேகரிப்பதற்காக பயனர்கள் தங்களின் செல்பேசிகளை அரிதான வகையில் பிபிசி குழுவினரிடம் தந்தனர்.

இன்று நடைபெறும் பிபிசியின் Beyond Fake News  நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியாவில் இந்த ஆழமான, தரமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவது குறித்த புரிதலை பெற பல்வேறுபட்ட சமூக வலைதள கணக்குகள், பக்கங்கள் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

இந்தியாவில் பல்வேறு சம்பவங்களில் வாட்சப்பில் பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் சுமார் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வன்முறைகளை தூண்டும் செய்திகளை மக்கள் பகிர்வதற்கு தயங்குகின்றனர். ஆனால் தேசியவாத செய்திகளை பகிர்வதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.

இந்தியாவின் முன்னேற்றங்கள், ஹிந்துக்களின் வலிமை மற்றும் ஹிந்துக்களின் தொலைந்து போன பெருமை ஆகிய செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயமலே மக்கள் பகிருகின்றனர்.

தங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளோடு ஒத்துப்போகும் செய்திகளையே இந்திய மக்கள் பகிர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே இம்மாதிரியான செய்திகள் உண்மைத் தன்மையை கண்டறியும் தன்மைக்கு எதிராக மாறிவிடுகிறது.

வாட்சப் குழுக்களில் தெரிந்தவர்கள் மட்டுமே இருப்பதனால் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு நபர் தானாக செய்தியை எழுதி அனுப்பாமல் அது நகர்த்தப்பாட்டு செய்தியானால் அதில் 'Forwarded'  என்று குறிப்பிடும் அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்தியது.

இது, அந்த செய்தி நகர்த்தப்பாடு செய்யப்பட்ட ஒரு செய்தி என்ற தகவலை பயனாளர்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் இந்த வசதி போலி செய்திகள் பரவுவதை தடுக்கவில்லை என பிபிசியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் தங்களுக்கு வரும் செய்திகளின் ஆதாரங்கள் குறித்து மக்கள் சோதிப்பதில்லை. மாறாக அதனை தங்களுக்கு அனுப்பும் நபர்களையே கருத்தில் கொள்கின்றனர். சமூகத்தில் மதிக்கப்படும் நபர்களால் வரும் செய்திகளை மக்கள் அதிகம் நகர்த்தப்பாடு செய்கின்றனர்.

தவறான தகவல்களை சரிபார்க்கமால் அனுப்புவது என்பது சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
தாங்கள் மதிக்கப்படும் நபர்களிடம் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை எவரும் ஆராய்வதில்லை. செய்திகளை பகிர்வதை தங்கள் கடமையாக கருதுகின்றனர்.

அண்மைக் காலமாக போலி செய்திகளை பரப்புவதில் வெகுஜன ஊடகங்களின் செயல்பாடுகளும் கேள்விக்குள்ளாகிறது. ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் மற்றும் வணிக நலன்களின் அழுத்தம் காரணமாக இயங்குகின்றன என்றும் அதன் காரணமாக எப்போதும் அவற்றை நம்பமுடியாது என்றும் மக்கள் நம்புவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

போலி செய்திகளை யார், எப்படி பரப்புகிறார்கள்? பிபிசி நடத்திய ஆய்வின் முழு அறிக்கை:
இந்தியாவில் போலி செய்திகளுக்கும், நரேந்திர மோடி ஆதரவாளர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கீச்சுப் பயன்பாட்டாளர்களின் செயல்பாடு சார்ந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து பார்த்ததில், இடதுசாரி கொள்கையுடையவர்களை விட, வலதுசாரி கொள்கையுடையவர்கள் மிகவும் ஒன்றிணைந்து செயல்படுவதை பிபிசி கண்டறிந்துள்ளது.

ஹிந்து மதம், மோடி, தேசியவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் ஒன்றோடொன்று இணைந்து பாஜகவின் ஆதரவாளர்களாக செயல்படுவதால், கீச்சுவில் பாஜகவிற்கு மிகப் பெரிய பலம் உள்ளது.

எனவே, இந்த வலுவான பிணைப்பின் காரணமாக இடதுசாரி கொள்கை கொண்டவர்கள் தெரிவிக்கும் உண்மை பிரகடனங்களை விட வலதுசாரி கொள்கையுடைவர்கள் பரப்பும் போலி செய்திகள் மேலும் திறம்பட பரவுகிறது.

இடதுசாரி கொள்கையுடையவர்கள் மோடி எதிர்ப்பு, ஹிந்துத்துவ எதிர்ப்பு போன்ற தங்களது வேறுபட்ட ஒற்றுமைகளை முதலாக கொண்டு செயல்படுகிறார்கள்.

இடதுசாரி கொள்கை உடையவர்களும் போலி செய்திகளை பரப்பினாலும், வலதுசாரிகளோடு ஒப்பிடுகையில் அவர்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிக குறைவாகவே உள்ளன.

வலதுசாரி கொள்கை உடையவர்கள் பரப்பும் போலி செய்திகள் ஆளுங்கட்சியான நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. ஆனால், இடதுசாரிகள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்டவர்களுடன் ஒன்றுபட்டு செயல்படவில்லை.

இந்தியாவை சேர்ந்த 16,000 பேரின் கீச்சுக் கணக்கு செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கீச்சுவில் அடிக்கடி போலி செய்திகளை பரப்பும் சில கணக்குகளை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பின்தொடர்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நரேந்திர மோடி பின்தொடரும் 56.2 விழுக்காடு கணக்குகள் கீச்சு நிறுவனத்தால் சரிபார்க்கப்படாத கணக்குகளாக உள்ளன. அதுமட்டுமின்றி, நரேந்திர மோடி பின்தொடரும் 61 விழுக்காடு சரிபார்க்கப்படாத கணக்குகள் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கும் வகையில் இருக்கின்றன. ஆனால், சாதாரண மக்களை பின்தொடர்வதன் மூலம் அவர்களுடன் இணைவதற்கு பிரதமர் மோடி முயல்வதாக பாஜக புளுகுகிறது.

ஆனால், சாதாரண மக்கள் என்று குறிப்பிடப்படும் அந்தக் கீச்சு கணக்குகளை குறைந்தது சராசரியாக 25,000 பேர் பின்தொடர்வதுடன், 48,000க்கும் மேற்பட்ட பதிவுகளையும் இட்டுள்ளது, பிபிசியின் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 11 விழுக்காடு சரிபார்க்கப்படாத கணக்குகளையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 37.7 விழுக்காடு சரிபார்க்கப்படாத கணக்குகளையும் பின்தொடர்வதும் தெரியவந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இந்தியாவின் ஏழு நகரங்களில் போலி செய்திக்கெதிராக பிபிசி நடத்தும் நிகழ்வுகளில் அரசியவாதிகள், நடிகர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான முகநூல், கூகுள், கீச்சு ஆகியவற்றின் பேராளர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

செயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு, ஆளும் அதிமுக, பாஜக வசம் சிக்குண்டதால், கொஞ்சம் கூடுதலாக ஹிந்துத்துவா போலிச் செய்திகள் தமிழகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட, பல்வேறு தமிழகக் கோயில்களை கட்டியது யார்? கட்டப் பட்ட காலம் என்று இணையத்தில் தேட முனைந்தால், 99.9 விழுக்காடு புராணப் புளுகு முட்டைகளே விடைகளாக கிடைக்கின்றன. பெரியாருக்குப் பின்பு பெரியாரைக் கொண்டாடும் அமைப்புகள் ஹிந்துத்துவா போலிச் செய்திகளை அடையாளப் படுத்தும் முயற்சியில் ஈடுபட முடியாமல், தேசியவாத அச்சுறுத்தல் தடையாக்கப் பட்டிருக்கிறது. பிபிசியின் இந்த முயற்சியை பாதுகாப்பாக்கிக் கொண்டு, தேசியவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், தமிழிசை, ராஜா, பொன்னர், போன்ற பாஜக தொண்டரடிப் பொடிகளின் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்ட, பெரியாரைக் கொண்டாடும், திராவிட இயக்கத்தினர் தங்களை மீண்டும் மீட்டெடுத்துக் கொள்ள முயலலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.