Show all

கனிந்து வருகிறதா பேரறிவாளன் விடுதலை! பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? என்று உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்- தமிழகஅரசு எழுவரையும் ஒரு கிழமைக்குள் விடுதலை செய்து விட்டு, அடுத்த கிழமை, உச்ச அறங்கூற்று மன்றத்தில்- “உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்து விட்டோம்” என்று அறிக்கை பதிகை செய்ய முடியுமோ? என்று இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள் நடுவே நம்பிக்கை கனிந்து வருகிறது. 

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்ட பிறகும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என உச்சஅறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மின்கலம் வாங்கிக் கொடுத்ததாக, தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர் நாகேஸ்வரராவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை தரப்பு, கச்சை வெடிகுண்டு விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை பதிகை செய்தது. அதனைப் படித்த அறங்கூற்றுவர்கள் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதிகை செய்த அறிக்கைக்கும் இன்று பதிகை செய்துள்ள அறிக்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று அறங்கூற்றுவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், இலங்கை, லண்டன், ஹாங்காக் நாடுகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை என்ன தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அறங்கூற்றுவர்கள், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கறிஞர் தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டு வருவதாகக் கூறினார்.

பின்னர் வாதிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். கச்சை வெடிகுண்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் விசாரணை முடியும் வரை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க தமிழக அரசும், ஆளுநரும் முடிவு செய்யலாம் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன் மீது தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அப்போது அறங்கூற்றுவர்கள், உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுக்குப் பிறகு பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அது குறித்து இரண்டு கிழமை காலத்தில் அறிக்கை பதிகை செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தமிழக அரசு எழுவரையும் ஒரு கிழமைக்குள் விடுதலை செய்து விட்டு, அடுத்த கிழமை, உச்ச அறங்கூற்று மன்றத்தில்- “உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்து விட்டோம் என்று அறிக்கை பதிகை செய்ய முடியுமோ? என்று இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள் நடுவே நம்பிக்கை கனிந்து வருகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.