Show all

ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

பாஜக முதல்வர்கள், அமைச்சரின் ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலின்போது மோடி அள்ளிவீசிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன, அவர் வெறும் வாய்பேச்சு வீரர், செயல் வீரர் அல்ல என்று சோனியா குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் போபாலில் நேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள் என்று விமர்சித்தார்.

இதுகுறித்து ரேபரேலியில் நேற்று முகாமிட்டிருந்த சோனியாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறார்.

ஊழல் புகார்களில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உதவி செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களை ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டும் முன்பு பாஜகவில் அவர் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.