Show all

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி; சோனியா மீதான மோடியின் விமர்சனத்தால்

தமிழக தேர்தல் கருத்துப் பரப்புதலில் சோனியா மீது மோடி விமர்சனம்: நாடாளுமன்றத்தில் காங். கடும் அமளி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் சோனியா காந்தி லஞ்சம் பெற்றதாக இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய விவகாரம் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தது. கன்னியாகுமரி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சோனியா காந்தி ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பிரதமர் விளக்கம் தரக்கோரி ராஜ்யசபாவில் இன்று காலை கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், பொய்கூறுவதில் வல்லவரான மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை தொடங்கிய முதல் இரு மணி நேரத்தில், 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது கேட்பட்ட ஒரே கேள்வியோடு வேறு எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியது. தொடர்ந்து சபை நடவடிக்கைகளில் இடையூறு இருந்ததால் ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பியது. இதனால் லோக்சபா அமளி காடானது. ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான விவாதத்துக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜேட்லி இது போன்ற எந்த கருத்தையும் கூறாத நிலையில், பிரதமர் மோடி எவ்வாறு அப்படி பேசலாம் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் தர வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.