Show all

பாகிஸ்தான் விடுதலை செய்த 87 மீனவர்கள் செவ்வாயன்று இந்தியா திரும்புவர்

பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 87 மீனவர்களின் பயண ஆவணங்களை, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்கிய பின்னர், அவர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பாகிஸ்தான் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, இந்தியாவைச் சேர்ந்த 87 மீனவர்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

 இந்நிலையில், கடந்த சில காலமாக, இந்தியச் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களும், அங்கு இருக்கும் இந்திய மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் இரு நாடுகளாலும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

 அதன்படி, கராச்சியில் உள்ள லாந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 87 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அவர்கள் சிறையில் இருந்து தொடர்வண்டி மூலம் லாகூருக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டனர்.

 இதுதொடர்பாக, பாகிஸ்தான் துணை ராணுவத்தின் அதிகாரி ஒருவர், செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களால் விடுதலை செய்யப்பட்ட 87 பேரை ஆய்வு செய்து, அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டிய வாகா எல்லையின் அதிகாரி திங்கள்கிழமை வரவில்லை. இதனால் அவர்களை ஒப்படைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறினார்.

 இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் கூறுகையில்,

அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான தகவல் மிகவும் குறுகிய காலத்தில் அளிக்கப்பட்டது. அவர்கள் இந்தியர்கள் என்றாலும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கான ஆவணங்களை, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.