Show all

மங்கள்யான் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகச் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த  விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. தொடர்ந்து  டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த விண்கலம் பூமியின் வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தது. இதையடுத்து கடந்த  ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி அன்று, செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. அதன் ஆய்வு மேற்கொள்ளும் பணி தொடங்கி  இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இந்த விண்கலத்தில் உள்ள சிறப்பு கருவிகளில் ஒன்றான மீத்தேன் உணர்வான் சேகரித்து இருக்கும் தகவல்கள் செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தைப் பற்றிய பல புதிய உண்மைகளைக் கண்டறிய உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவின் நாசா  விண்வெளி மையமும் நாசா க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இஸ்ரோ அனுப்பியுள்ள மங்கள்யானை விட இது  பல மடங்கு குறைவான தகவல்களையே சேகரிக்க கூடிய தன்மை உடையது. இந்நிலையில், மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில்  ஆய்வு பணி மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு மங்கள்யான் எடுத்து அனுப்பியுள்ள படங்களை இஸ்ரோ இன்று காலை வெளியிட்டுள்ளது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.