Show all

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவிப்பு

யூகோஸ்லாவியாவில் பிறந்து, இந்தியாவின் கொல்கத்தா நகரில் ஏழைகளுக்காக பணியாற்றிய கத்தோலிக்க கன்னியாஸ்திரி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் செப்டம்பர் 4 ஆம் தேதி வழங்கப்படும் போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

 

யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் கடந்த 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் நாள் பிறந்தவர் தெரசா. அனைவராலும் அன்னை தெரசா என அழைக்கப்பட்ட இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இளம்வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டவர்.

 

இவர் கடந்த 1929 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கத்தா கிளையில் இணைந்த அவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

 

1950 ஆம் ஆண்டு ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’  என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார் தெரசா. அதன் மூலம் ஏழ்மையில் உள்ள பலருக்கு உதவிகளைச் செய்தார். தொழு நோயாளிகள் மத்தியில் அவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை. கடந்த 1951 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

 

இவரைப் பாராட்டி இந்திய அரசு கடந்த 1980 ஆம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான  ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் விதமாய் உலக அமைதிக்கான நோபல் பரிசு (1979 ஆம் ஆண்டு) வழங்கப்பட்டது.

 

பிறர் நலனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசா கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மரணமடைந்தார்.

 

கத்தோலிக்க மார்க்கத்தில் புனிதர் பட்டம் வழங்குவதற்கு குறைந்தது இரு அற்புதங்களையாவது நிகழ்த்தியிருக்க வேண்டும். கடந்த 1998 ஆம் ஆண்டு வயிற்றில் உருவான கட்டியால் அவதிப்பட்ட பெண் ஒருவரை தெரசா குணமாக்கினார்.

 

மற்றொரு அற்புதம் அவரது மறைவுக்குப் பின் நடைபெற்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கதக்க ஒருவர் மூளையில் உருவான கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அறுவை சிகிச்சை தாமதமானது. அப்போது அவரது மனைவி, அங்கிருந்த சிற்றாலயத்துக்கு சென்று அன்னை தெரசாவிடம் வேண்டுதல் செய்தார். அதைத்தொடர்ந்து மூளைக் கட்டி இருந்த மனிதர் அற்புதமாக சுகமடைந்தார்.

 

இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையே கடந்த 2003 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால், அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

 

இதைத்தொடர்ந்து அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் வருகிற செம்படம்பர் 4 ஆம் தேதி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.