Show all

சபரிமலைக்கு எந்த ஆணும் செல்லக்கூடாது, எந்தப் பெண்ணும் செல்லக்கூடாது. அது புலிகளுக்கான இடம்! சூழலியல் ஆர்வலர் அச்சுதன்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு எந்த ஆணும் செல்லக்கூடாது, எந்தப் பெண்ணும் செல்லக்கூடாது. அது புலிகளுக்கான இடம். அங்கு புலிகளை வாழவிடுங்கள் என்று சூழலியல் ஆர்வலர் ஏ.அச்சுதன் வலியுறுத்தியுள்ளார்.

தென் மேற்கு பருவமழையின் போது கேரளாவில் பெய்த பெருமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோழிக்கோடு நகரில் நேற்று புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளத்துக்குப் பின் கேரளாவைக் கட்டமைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஏ.அச்சுதன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சபரிமலைக்கு ஆண்களும் செல்லக்கூடாது, பெண்களும் செல்லக்கூடாது. சபரிமலை என்பது புலிகள் வாழுமிடம். அதைப் புலிகளுக்காக விட்டுவிடுங்கள். தென் மேற்கு பருவமழை காலத்தில் வெள்ளம் வந்தது. இதை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நம்முடைய மாநிலத்துக்கு நீண்டகால கட்டமைப்புத் திட்டங்கள் தேவைப்படும் பொழுது, நாம் நம்முடைய நேரத்தையும், திறனையும், வளங்களையும் அற்பமான விசயங்களில் செலவு செய்கிறோம், வீணடிக்கிறோம்.

நாம் சாலைகளையும், வீடுகளையும் கட்டமைத்தல் குறித்துத்தான் அதிகமாக இங்கு விவாதிக்கிறோம், ஆலோசிக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழலை மறுகட்டமைப்பு செய்வதைப் பற்றி நாம் மிகவும் அரிதாகவே விவாதிக்கிறோம், ஆலோசிக்கிறோம்.

மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு நமக்கு மண் தேவை. நல்ல தரமான மண் பெறுவதற்கு நாம் முதலில் சுற்றுச்சுழலை, இயற்கையை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். நல்ல தரமான மண்ணைப் பெறுவதற்கு முதலில் நாம் பசுமையை பரவலாக்கி, வனத்தின் அளவைப் பெருக்க வேண்டும்.

இனிமேல் புதிதாக வனங்களை உருவாக்குவது என்பது இயலாத காரியம். ஆனால், மனிதர்களின் செயல்பாடுகளுக்குப் பிறகும் இப்போது மீதம் இருக்கும் வனப்பகுதியை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் இந்த வனப்பகுதியை இப்போது இருக்கும் நிலையிலேயே விட்டுவிட்டால், அது தானாக, மெல்லத் தன்னை வளர்த்துக்கொள்ளும்.

வனம் மெல்லப் பரவி, அதிகரிக்கும் போது, நமக்கு அதிகமான மழை கிடைக்கும். ஆறுகளில் நீர் அதிகமாக வரும், நிலத்தடி நீரின் அளவு நமக்கு அதிகரிக்கும். நிலத்தடியில் நீர் அதிகமாகத் தேங்குவதும், அதைத் தேக்குவதும்தான் நமக்கான சொத்தாகும். நாம் நிலத்தடி நீரை இழந்துவிட்டால், நிலம் வறண்டுவிடும்.

சபரிமலை குறித்த ஆய்வில் பங்கேற்றிருந்தேன். ஆய்வு குறித்த அறிக்கையையும் நாங்கள் அரசிடம் அளித்திருக்கிறோம். சபரிமலையில் இன்னும் அதிகமான அளவுக்கு வளர்ச்சிப்பணிகளை செயற்கையாக மேற்கொண்டால், பாறைகளையும், மரங்களையும் அகற்ற வேண்டியது இருக்கும். இது இயற்கையை நாம் தொந்தரவு செய்வதுபோன்றதாக அமையும். இதனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய நிலச்சரிவைச் சந்தித்து, ஒட்டுமொத்தமாக சபரிமலையை நாம் இழக்க வேண்டியதுவரும் என்று எச்சரித்துள்ளோம். ஆனால், யாரும் செவிமெடுக்கவில்லை.

அனைத்து அரசியல் கட்சிகளும் வளர்ச்சி, மேம்பாடு என்ற விசயத்தை வாக்கு வங்கிக்காகக் கையில் எடுக்கிறார்கள். சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மறுகட்டமைப்பு குறித்து சிந்திக்காமல் கொண்டுவரப்படும் திட்டங்கள் வீணாகும். இவ்வாறு அச்சுதன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.